Thursday, October 23, 2008

மிகச்சரியாக...


எவ்வளவு அழகாக
உன்னால் காதலிக்க முடிந்ததோ
அவ்வளவு கொடூரமாக
அக்காதலை முறித்துக் கொள்ளவும் முடிந்திருக்கிற
உன் மனசின் தன்மையை
எண்ணி வியக்கிறேன் வலிகளோடு..

படித்த கதைகளில்
பிசாசுகளுக்கு கூட இத்தகைய கொடூர மனம்
இருந்ததாய் படித்திருக்கவில்லை..

உன்னையும்,
உன் காதலையும்,
பிரிவுக்கு பின்பு என்னுள் படர ஆரம்பித்துவிட்ட
உன் நினைவுகளின் பேய்கரங்களுக்குள் சிக்கி
சிதறுண்டு கொண்டிருக்கும்
என்னையும்

காப்பாற்றிக்கொள்ளவியலாத
இயலாமையின்
ஆற்றாமை

கழிவிரக்கத்தையும்
தற்கொலை உணர்வையும்
ஒரு சேர தரும் இத்தருணத்தில்
என் சிறு அறையின் இருள்ந்த மூளைக்குள்
கால்களை கட்டி கொண்டு அமர்ந்திருக்கிறேன்..

சற்று முன்னதாக
ஒரு கூரிய பிளேடால்
அறுத்துக்கொண்ட கையிலிருந்து வரும் ரத்தம்
இப்போதைக்கு நிற்பதாக இல்லை..
மிகச்சரியாக நரம்பை அறுத்திருக்கிறேன்... :))

23.10.2008

Wednesday, October 22, 2008

மிக சுலபமான ஒரு தொடர்பதிவு...

இந்த தொடர்பதிவை எனக்கு மிகவும் பிடிச்சிருக்கு.. ஏனென்றால் மிக சுலபமான ஒரு தொடர்பதிவு..


என்னோட Desktop Screenshot -ஐ பதிவில் போட்டால் போதும்.. இதுதான் டார்கெட்..

இந்த தொடர்பதிவுக்கு என்னை அழைத்தது தோழி "அச்சச்சோ" ஸ்ரீமதி.. நன்றி Sri..


இதுதான் என்னோட இப்போதைய Desktop.. ஒரு நாளைக்கு பத்து தடவை Wallpaper மாத்துவேன்.. Task Bar இடம் மாற்றி வைப்பேன்.. Icons இடம் மாற்றி வைப்பேன்.. இப்படி ஒரு பழக்கம் எனக்கு.. :))

இந்த தொடர்பதிவுக்கு நான் அழைக்கும் நண்பர்கள்..

அண்ணன் நிஜமா நல்லவர்..
அன்புடன் அருணா அக்கா..
பதிவு பக்கமே வராமல் இருக்கும்
மது..

Desktop Screenshot எடுத்து போடுங்கப்பா.. இந்த தொடர்பதிவிற்காக..


22.10.2008

Saturday, October 18, 2008

தமிழ்மணத்தில் இந்த வாரம் - சினிமா தொடர்பதிவு வாரம்..

இந்த வாரம் முழுதும் இந்த தொடர் பதிவின் ஆதிக்கமே.. என்னை இந்த தொடர்பதிவுக்கு அழைத்த ஜி மற்றும் இவனுக்கு நன்றிகள்..
1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

ஞாபகமே இல்லை.. நம்ம சூப்பர் ஸ்டாரின் தளபதி படத்தை குடும்பத்தோடு பார்த்த ஞாபகம்.. என் முதல் சினிமா ஞாபகமும் அதுதான்.. என்ன உணர்ந்தேன் என்பதும் ஞாபகம் இல்லை..

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

காதலில் விழுந்தேன்.. நகுல் நல்லா பண்ணி இருக்காரு.. வாய்ப்பு கிடைத்தால் கொஞ்சம் வளரலாம்.. படம் அந்த அளவுக்கு நல்லா இல்லை என்பது என் கருத்து..

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

தமிழ் திரைபடத்தை அரங்கிலல்லாமல் கணினியிலோ அல்லது டி.வி-யிலோ பார்ப்பது கிடையாது.. அதுவும் டி.வி-யில் திரைப்படம் என்றால் கொடுமை.. விளம்பர இடைவேளை.. எனக்கு சுத்தமா பிடிக்காது.. சினிமா பார்க்கும் உணர்வே இருக்காது.. அப்படி இருந்தும் டி.வி.யில் கடைசியாய் பார்த்த திரைப்படம் நம்ம "தல"யின் காதல் மன்னன்.. எனக்கு மிகவும் பிடித்த படமது.. "திலோத்தமா" என்னவோ தெரியல இந்த பெயர் எனக்கு ரொம்ப புடிச்சி போச்சி..

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

இந்த கேள்வியை படித்ததும் நான்கு தமிழ் திரைப்படங்கள் சட்டென்று நினைவுக்குள் வந்தது..

அன்பே சிவம்.. இதுதாங்க திரைப்படம்.. பலவிதங்களில் பாதித்த படம்.. "யாருனே தெரியாத பையனுக்காக அழுவுற அந்த மனசு.." "ஒருத்தனை வெட்டனும்னு வந்துட்டு, அருவாளை கீழ போட்டுட்டு மன்னிப்பு கேட்கிற மனசு.." "ஆனா ஆண்டவன் அண்ணன ஒண்ணும் பண்ணல பாத்தீங்களா.." மனச விட்டு இன்னும் போகல இந்த படம்..

7Gரெயின்போ காலனி.. படம் பார்த்துவிட்டு கிட்டத்தட்ட ஒரு வாரம் நான் யார்கிட்டயும் ஒழுங்கா கூட பேசல.. [இப்போவும் யாருகிட்டயும் நான் அவ்வளவாக பேசுவது கிடையாது..] ரொம்ப பாதித்து விட்டது..

முகம்.. நாசர் நடித்து வந்த ஒரு திரைப்படம்.. நீங்களும் பாருங்கள்.. பார்க்கவில்லை என்றால்.. அருமையான திரைப்படம்..

பேசும்படம்.. நம்ம உலக நாயகன் நடித்த திரைப்படம்.. ஒரு சின்ன டயலாக் கூட கிடையாது.. ஹிந்தி படத்தின் தழுவல் என்று கேள்விபட்டேன்.. படத்தின் முடிவு சொல்லும், அவ்ளோ தான்பா வாழ்க்கை என்று...படம் பார்த்த பின் யார்கிட்டயும் பேசவே தோணாது.. அந்த அமைதியை நீங்க நேசிக்க ஆரம்பிச்சிடுவீங்க..

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

எப்போதும் நம்ம உலக நாயகன் கமல் படங்கள் பற்றி ஏதாவது ஒரு சர்ச்சையை கிளப்புவது.. அரசியலாக்குவது.. சினிமாவ சினிமாவா மட்டும் பாருங்கப்பா குறைந்த பட்சம்.. அதை அரசியலாக்காதீங்க..

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?

நெறையவே இருக்கு.. சமீபத்ய அஞ்சாதே திரைபடத்தின் கேமரா உத்தி ஒரு உதாரணம்...

6. தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

நிச்சயம்.. :)) நெறைய சினி தளங்களை உலாவுவது உண்டு நேரம் கிடைக்கும் போது..

7.தமிழ்ச்சினிமா இசை?

A.R.ரஹ்மானின் பாடல்கள் மிகவும் பிடிக்கும்..
ஆனால் ஒரு காலகட்டதில் பிடித்து போகும் ஒரு பாட்டை மட்டுமே திரும்ப திரும்ப கேட்பேன்.. அது அந்த சூழலை தனக்குள் ஈர்த்து கொள்ளும்..பின் வேறொரு காலத்தில் எப்போதாவது அப்பாடலை கேட்கும் போது அந்த காலகட்டத்தை நினைவுபடுத்தி தரும் வெகு பசுமையாய்.. இப்போது எப்போதுமாய் கேட்டுகொண்டிருக்கும் பாடல் "காதலில் விழுந்தேன்" படத்தின் "சொல்லடி" பாடல். என் ரிங்டோன் கூட இந்த பாடல்தான்.. :))

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

நிறைய பார்ப்பதுண்டு. இந்திய சினிமா இல்லை.. ஏனென்றால் தமிழ் தவிர வேறு எந்த இந்திய மொழியும் எனக்கு தெரியாது..[அப்போ உலக மொழியெல்லாம் உனக்கு தெரியுமான்னு கேட்க கூடாது]

அதிகம் அதிகம் அதிகம் அதிகம் அதிகம் அதிகம் பாதித்த திரைப்படம்.. அழ வைத்த திரைப்படம்.. இத்தாலிய திரைப்படமான Life is Beautiful..

இதை தவிர்த்து நிறைய பிடித்த திரைப்படங்கள் உண்டு.. ரொம்ப பிடித்த திரைப்படம் The Count of Monte Cristo.

இன்னும் சில.. One flew over the cuckoo's Nest, A Beautiful Mind, Crash, Pursuit of HappYness, 50 first dates, Derailed, Just like heaven, Finding Nemo, SAW 1,2,3,4..மற்றும் நிறைய காமெடி திரைப்படங்கள்.. போதும் இதோட நிறுத்திக்குவோம்.. பிடித்த உலக திரைப்படங்கள் பற்றி ஒரு தனி பதிவே போடலாம்..

இன்னும் காணகிடைக்காமல், காண விரும்பும் படம் Bicycle Theif..

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்?
பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

எனக்கு தெரிந்த அண்ணா ஒருவர், உதவி இயக்குனராக ஏழு வருடங்கள் மிகவும் கஷ்டப்பட்டும், இறுதியில் ஒரு வாய்ப்பும் கிடைக்காமல் வேறு வேலை தேடி சென்றார்..மற்ற கேள்விகெல்லாம் இல்லை என்பதே பதில்.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

செல்வராகவன், மிஷ்கின்.. போல இன்னும் சிலர் வந்தால் நல்ல எதிர்காலம் உண்டு..

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

எனக்கு ரொம்ப கஷ்டமாயிடும்.. நம்ம ஆளுங்க சினிமா மாயையிலிருந்து விடுபட ஒரு நல்ல வாய்ப்பு..


அப்பாடா.. ஒரு வழியா முடிச்சாச்சி..

நான் அழைக்க விரும்பும் ஐந்து பேர் [முறைக்காதீங்க.. அடுத்த ஒரு தொடர்பதிவுல நீங்க என்ன தாரளமா மாட்டி விடலாம்... இந்த டீல் ஓகே வா??]

1. அலுவகத்தில் பிளாகை பிளாக் பண்ணியதால் பதிவு பக்கமே வராமல் இருக்கும்
பிரேம்..
2. 3rd Year-ல் மும்முரமாக இருக்கும்
திவ்யப்ரியா..
3. கவிதை அண்ணன்
அனுஜன்யா..
4.
அன்புடன் அருணா அக்கா..
5. பதிவு பக்கமே தலை காட்டாமல் இருக்கும் தோழி
தமிழினி..


18.10.2008

Thursday, October 9, 2008

அவன் - சில தகவல்கள் [அ] சப்ப மேட்டரு...


அவன் அவளை வெகுவாகவே நேசித்திருந்தான் போலும்..


அவனுக்கு கோவிலுக்கு போகும் பழக்கமிருந்தது.. வழமை போல் ஒரு கோவில் பிரகாரத்தில் அவளை முதன் முதலாய் சந்தித்தப்போது காதல் கடவுள் வீனஸை அவள் கண்களில் கண்டதாகவும், அவள் தேவதை என்றும் சொன்னான்.. அதுநாள் முதல் காதல் பித்து தலைக்கேறி விட்டதாகவும் இனி அவளில்லாமல் அவன் இல்லை என்றும் புலம்ப ஆரம்பித்தான்..

அவளிடம் பேசுவதற்கான வார்த்தைகளை நட்சத்திரங்களின் ஒளியிடமிருந்து தினம் இரவு திருடுவதாகவும், அவற்றை தன் வீட்டின் ஆறுபக்கமும் கண்ணாடியாலான ஒரு தனியறையில் அவ்வார்த்தைகளை சேமிப்பதாகவும், அவ்வார்த்தைகள் கண்ணாடிகளில் எதிரொலித்து எதிரொலித்து இன்னும் மெறுகேருவதாகவும் சொன்னான்..

சூரியன் மங்கி கிடந்த ஒரு மாலை வேளையில் வெகு எதேச்சையான சமயத்தில் அவள் பேசிய போது, கைவசமிருந்த ஒளி வார்த்தைகளை அவளிடம் உளறி கொட்டியதாகவும், அதில் மயங்கி அவனை காதலிக்க ஆரம்பித்ததாகவும் சொன்னான்.. பின் தினம் மாலையில் அவளை சந்திக்க ஆரம்பித்தாகவும் எடுத்து போன ஒளி பொருந்திய வார்த்தைகளை சொல்லி சொல்லி அவளை தன் பிடியில் கொண்டு வந்ததாகவும், அவ்வார்த்தைகளை பிரயோகிக்க ஆரம்பித்த பின், அவ்வார்த்தைகள் அவளை சூழ்ந்து கொண்டு அவளை வசீகரமானவளாக மாற்றின என்றும், அதன் பின் அவள் நிலவாக மாற ஆரம்பித்தாள் என்றும் கூறினான்..

அவன் தன்னை மிக நல்லவன் என்றும், கண்ணியமானவன் என்றும், அவளை தவிர வேறு எந்த பெண்ணையும் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை என்றும், ஒரு நாளும் அவளுக்கு வலுக்கட்டாயமாய் ஒரு முத்தம் கூட தந்ததில்லை என்றும், அவளோடு எங்கும் மேகங்களில் சுற்றியதுமில்லை என்றும், அவளை உண்மையாய் காதலிப்பதாகவும் சொன்னான்..

ஒருநாள் நடு இரவில் படப்படப்போடும் அதிர்ச்சி மற்றும் பயம் கலந்த முகத்தோடும் வந்திருந்த அவன், தன் வீட்டின் கண்ணாடி அறை உடைத்து நொறுக்கபட்டி இருப்பதாகவும், தான் சேமித்து வைத்திருந்த ஒளி வார்த்தைகள் களவு போய்விட்டதாகவும், தான் நட்சத்திரங்களிடமிருந்து திருடும் ஒளி வார்த்தைகளை பற்றி யாரோ நட்சத்திரங்களிடம் சொல்லிவிட்டதாகவும் சொன்னான்..

மேலும் அவன், அன்று மாலையில் அவளுக்காக காத்து இருந்தபோது அவள் வரவில்லை என்றும், அவளை தேடி அவள் வீட்டிற்க்கே சென்ற போது, வேறு ஒருவன் அவ்வார்த்தைகளை கொண்டு அவளை அழாகாக்கி கொண்டிருந்ததாகவும், அவள் "என்னை மறந்து விடு, உன்னை விட ஒளி வார்த்தைகள் தான் எனக்கு பிடித்தமானவை" என்று சொல்லிவிட்டு "நீ வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளவில்லை. உன் வாய்ப்புகளை நீ இழந்துவிட்டாய்" என்று சொல்லி ஏளனமாக ஒளி சிதற சிரித்தாள் என்றும் சொல்லி கதறி அழுதான்..

இனி காதல் தோல்வியில் தான் தாடி வளர்க்க போவதாகவும், அவளை நினைத்து கவிதை கிறுக்க போவதாகவும் சொன்னான்.. "நீ அவளிடம் அன்பை காட்டாமல்,உன் ஒளி வார்த்தைகளை மட்டுமே கொண்டு மயக்கி வைத்திருந்தாய்.அவளும் உன்னை விரும்பவில்லை.உன்னிடமிருந்த ஒளி வார்த்தைகளில் மயங்கி கிடந்தாள்.இது எப்படி காதலாகும்??
டேய்.. இது லவ்வு கெடியாது.. சப்ப லவ்வு.. சப்ப மேட்டரு.."
என்று சொல்லியபோது அவன் கொஞ்சம் தெளிவாயிருந்தான்.. பின்னர் விடியும் வரை தண்ணியடித்தோம் சைடு டிஷ் ஏதுமில்லாமல்..


ஏனோ மறுநாள் மதியம் அவன் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வந்தது "நானொரு கோழை" என்றொரு கடிதம் எழுதி வைத்துவிட்டு.. அவன் அவளை வெகுவாகவே நேசித்திருந்தான் போலும்..

டிஸ்கி: இதை எழுதி முடித்தபோது அய்யனாரின் "கங்காவைப் பற்றி சில தகவல்கள்" பதிவு ஞாபகம் வந்தது..